Thursday, December 4, 2008

அச்சுதானந்தனின் பட்டி...

ஒரு சில விநாடிகள் தான் ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து, தான் ஒரு மலையாளி என்பதை உணர்த்திய அச்சுதானந்தனுக்கு நன்றிகள் பல...

என்னதான் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் ஏதோ ஒன்றுக்கு ஏதோ புத்தி அதை விட்டு போகாது... இவர்களிடம் தண்ணீரை எதிபார்க்கும் ஏமாளி தமிழர்களை என்ன சொல்லலாம்...

அது சரி மேஜர் உண்ணியாவது நேர்மையான வழியில், கஷ்டப்பட்டு ஒரு வேலையை தேடி, அந்த வேலையில் நேர்மையாக இருந்து, அதற்காகவே உயிரையும் விட்டுள்ளார்...

இந்த பட்டி அச்சுதானந்தன் என்னத்தை கிழித்தார் என்பதற்காக எல்லா நாய்களும் அவர் வீட்டை திரும்பி பார்க்கவேண்டுமாம்... போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்...

Wednesday, October 8, 2008

பெண்கள்...

பெண்கள் என்பவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை யாராலும் சொல்ல முடிவதில்லை... அவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பலவீனம் (அவர்கள் அதை பலம் என்று நினைத்து வாழ்கிறார்கள் என்பது மற்றொரு நகைப்பு...) அவர்களுக்கு மனிதர்களில் நல்லவர், கெட்டவர் என்று இரண்டு வகை உண்டு என்பதை அறியாதது... அவர்கள் இரண்டு வகை மனிதர்களுக்கும் ஒரே அளவுகோலை வைத்தே அலைகிறார்கள் என்பது மிகப்பெரிய சோகம்... அதை விட மிகப்பெரிய வருத்தம் அவர்கள் தங்களுக்கு இந்த பலவீனம் இருக்கிறது என்பதை உணராமல் இருப்பது, அப்படியே உணர்ந்தாலும் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பது இன்னொரு சோகம்..

அதெப்படி இவர்களால் உறவுகளை ஏற்படுத்தி கொள்ளவும், முறித்து கொள்ளவும் இவ்வளவு எளிதாக முடிகின்றது என்பது இன்னொரு மிகபெரிய ஆச்சரியம்...(அல்லது முறித்துக்கொண்டது போல் நடிக்கவாவது முடிகின்றது). இவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆழமான மனது, அதில் ஏன் இவ்வளவு அழுத்தமான, கடினமான கதவுகள்?

பெண்கள் பொதுவாக உணர்ச்சிவயப்பட்டவர்கள், அவர்கள் சட்டென்று இளகி விடுவார்கள், ஏதேனும் ஒரு விஷயம் என்றால் உருகி விடுவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள்... எல்லாமே சரிதான் ஆனால் இவர்கள் இதையெல்லாம் செய்வது அவர்கள் நல்லவன் என்று நினைத்து இருக்கும் ஆண்களிடம் தான்... வேடிக்கை என்னவென்றால் அவர்கள் அப்படி நல்லவன் என்று முடிவு செய்ததே தவறான முடிவாக இருக்கும். இவர்களிடம் இருக்கும் மற்றொரு விஷயம், ஓரிடத்தில் தவறு செய்து அதனால் ஏற்பட்ட காயம், வலி காரணமாக அதன் பின்பு கிடைக்கும் உண்மையான அன்பிற்கும் சந்தேகத்தை தான் பரிசாகவும், அலட்சியத்தை தான் அன்பளிப்பாகவும் கொடுப்பார்கள்...

யோசித்து பார்த்தால் நமக்கெல்லாம் அன்பு என்ற ஒன்றை முதன் முதலில் காட்டியதே, அது எவ்வளவு உயர்ந்தது, உன்னதமானது என்பதையெல்லாம் உணர்த்தியது நம் அம்மாதான்...ஒரு பெண் தான்... எனினும் நம் வாழ்க்கையில் நாம் தினந்தோறும் அன்பிற்கும் ஆதரவிற்கும் ஏங்கி தவித்து ஆறுதலாக ஒரு வார்த்தை எதிர்பார்க்கும் ஒரே இடம் பெண்கள் என்னும் போதும், அதை அவர்கள் நன்றாக அறிந்திருந்த போதும், நமக்கு ஏமாற்றமே கிடைக்கின்றது எனில் இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை...

எனினும் என் போன்றவர்களுக்கு வாழ்க்கை என்பது...Emily Dickenson சொன்னது போல்...

IF I can stop one heart from breaking,
I shall not live in vain;
If I can ease one life the aching,
Or cool one pain,
Or help one fainting Robin
Unto his nest again,
I shall not live in vain.

ஒரே ஒரு இதயம் முறிவதை தடுக்க முடிந்தால், ஒரு வலியை, வேதனையை குறைக்க முடிந்தால், கூட்டில் இருந்து தவறி விழுந்த குருவியை மீண்டும் அதன் கூட்டுக்கு திருப்பி அனுப்ப முடிந்தால் நான் வாழ்ந்தது வீண் அல்ல...

Tuesday, October 7, 2008

ஏன் இப்படி...?

எத்தனையோ முறை நாள்தோறும் பேப்பரிலும், புத்தகங்களிலும் ஏதேனும் ஒரு கருத்துக்கணிப்பு, பேட்டி புகைப்படத்துடன் வெளியாகிறது. டீவியில், நடந்து செல்லும் யாரோ ஒருவரை நிறுத்தி இதை பற்றி என்ன நினைகின்றீர்கள், அது சரியா? இதை பற்றி அவர் சொன்னது சரியா என்றெல்லாம் கேட்கின்றார்கள்...

நானும் மெட்ராஸில்தான் இருக்கின்றேன், தினந்தோறும் வெளியில் வருகின்றேன்... சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு என்று எல்லா இடங்களிலும் சுற்றி திரிகின்றேன் ஆனால் ஒரு நாள் கூட, ஒரே ஒரு முறை கூட யாருமே நிறுத்தி கேட்டதில்லை ஏன்? எனக்கு தெரிந்தவர்களை கூட கேட்டதில்லை ஏன்? இவர்கள் எதன் அடிப்படையில் பேட்டிகாண சக மனிதர்களை தேர்வு செய்கிறார்கள் என்று தெரியவில்லை, உங்களுக்கு தெரியுமா?

**********************************************************************************
இன்னமும் ஒரு உதவி...

காலம் காலமாக கேட்கப்பட்டு வரும் கேள்விதான்... அன்பு முழுவதையும் கொட்டினாலும் ஏன் பெண்களுக்கு நம் அன்பின் மீது கூட சந்தேகம் வருகிறது... அன்பு செலுத்த ஏதேனும் விதி முறைகள் உள்ளதா? இல்லை அவர்களின் பார்வையில் அன்பு என்பதன் வடிவம் எது...

ஒரு மனிதன் தன் சக உயிரின் மீது காட்டும் அன்பின் எல்லை ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றாலும், இவர்கள் மட்டும் எல்லையின் அளவை விரிவாகி கொண்டே போவது ஏன்... அன்பு என்பது எல்லை இல்லாததுதான் என்றாலும் அன்பு செய்யும் மனதின் எல்லைகளையே இவர்கள் சந்தேகப்படுவதுதான் பிரச்சனையின் மூல காரணம் என்று எண்ணுகிறேன்... விளக்கம் ப்ளீஸ்...

********************************************************************************
திரிபு...
இங்குள்ளவர்களின்
நட்பு சிலாகிப்பு
பால் மாறுபாடெனில்
திரிந்துபோய்விடுகிறது

Tuesday, September 30, 2008

பேசுவார்கள்...

என்ன செய்வது... எது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசலாம்...சுதந்திர நாடு இது...

"நான் மத சார்பற்றவன்..." திரு. L. K. அத்வானி சொன்னதாக பேப்பரில் இன்று படித்தபோது இன்னமும் யாரெல்லாம் எதெல்லாம் பேசமுடியும் இந்த நாட்டில்?

தமிழ்நாட்டில் நிலவும் மின்தடைக்கு காரணம் ஜெயலலிதாவின் கோடநாடு மாளிகையில் அதிகபடியாக எரியும் விளக்குகள் - திரு. ஆற்காடு வீராசாமி.

சன் டீவியை ஜெயலலிதா வாங்கி விட்டார் எனவேதான் அதில் இப்போது தி. மு.க. எதிர்ப்பு - கருணாநிதி.

கலைஞர் டீவி என்று ஒன்று தமிழ்நாட்டில் ஒளிபரப்பாவது நீங்கள் கேட்கும் போதுதான் எனக்கு தெரிகிறது, தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் ஓயாது பணியாற்றவே எனக்கு நேரம் போதவில்லை - நீங்கள் கலைஞர் டீவியில் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி எது என்ற நிருபரின் கேள்விக்கு கருணாநிதியின் பதில்...

எங்கள் கட்சியின் வளர்ச்சியை பார்த்து சோனியா காந்தி கூட்டணி குறித்து நேற்று என்னிடம் பேசினார், யோசித்து சொல்கிறேன் என்று சொல்லி இருக்கின்றேன் - விஜயகாந்த்.

ஸ்டாலினும், கனிமொழியும் அண்ணா தி. மு. க. வில் இணைவது குறித்து பேசுவதற்க்காக தோட்டத்திற்கு வந்திருந்தார்கள் - ஜெயலலிதா.

சசிகலா என்பவர் என் வீட்டில் சமையல் வேலை செய்து வருபவர் அவருக்கும் எனக்குமான தொடர்பு என் வீட்டு சமையல் அறை வரை கூட கிடையாது - ஜெயலலிதா.

Monday, September 29, 2008

கிறுக்கல்கள்-2

கல்லூரி நாட்களில் கவிதை என்ற பெயரில் ஏராளமான விசயங்களை கிறுக்கியது உண்டு...பெரும்பாலும் "காதல்" கவிதைகள்...

முடியுமானால்...
ஒரு நாள்
நானாக வாழ்ந்து பார்
நீ எனக்கு என்னவென்று புரியும்...

******************************************************************************

நீ மட்டுமேஅறியவில்லை...
பூ உறையும் வாசமாய்
என் நினைவில் நீ உறைந்து விட்டதை...
உன் கூந்தல் உதிர்த்த பூத்தொடும்
விரல் நுனியில் என் உயிர் துடித்ததை...
உன் இமைகளின் துடிப்பில்
என் இதயம் இயல்பழிந்ததை...
சரிதான்...
எந்த மேகமறியும்
தான் மறைப்பது
நிலவை என்று...

*******************************************************************************
நீ
எனக்கென கட்டப்பட்ட
கல்லறையில் கூட
இங்கு வேறொருவர் பெயர் தான்
செதுக்கப்பட்டுள்ளது...

********************************************************************************

Wednesday, September 24, 2008

இரவு


இருள் என்பது குறைந்த ஒளி - - பாரதி


இரவுகளின் மீதான் அச்சம் சிறு வயதிலயே தோன்றிவிட்டது. இருளின் இடுக்குகளில் என்ன புதைந்து இருக்கும் என்ற கேள்விகள் சிறு வயதிலயே துவங்கி விட்டன. இரவுகளின் மீதான நம் முதல் ஈர்ப்பு பயத்தின் அடிபடையிலேயே துவங்குகிறது. பகல்களை போன்றதல்ல இரவுகள், நமக்கு பகல் என்பது உணவு, கல்வி, விளையாட்டு, நீயும் நானும் முகம் பார்த்து கொள்ளும் கண்ணாடி, ஆனால் இரவுகள் உணர்வுகளின் அடிப்படையில் உணரப்படுவது, நமக்கும் இயற்கைக்கும் இடைவெளி குறைந்து, அதனுடன் கலக்கும் பொழுதுகள், இந்த புரிதல் இன்மையே நம் சிறுவயது பயத்தின் அடிபடையாக இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.


வயது கூட கூட, பதின் பருவம் எய்தும் போது, நிலவும், நட்சத்திரங்களும், என்றேனும் பிரகாசமாக, அருகில் வந்து ஒளிரும் கிரகங்களும் வாழ்வின் உண்மையான சந்தோசங்களில் ஒன்றாய் மாறிபோனது.


சற்றே மெலிதான பனி காற்று வீசும், நட்சத்திரங்கள் ஜொலிக்கும், வானின் கருமையுடன், சற்றே நீலமும் கலந்த, டிசம்பர் மாத துல்லிய இரவுகளில் ஏதேனும் ஒன்றில் தான் என் முதல் கவிதை எழுதினேன் என்று நியாபகம். எல்லா மாதங்களையும் விட டிசம்பர் இரவுகளில் தான் வெள்ளை கோடுகளை விசிறிவிட்டது போன்ற வெண்மேகங்கள் அதிகம் கிடைக்கும், வானின் நீலமும் அதிகம் தெரிந்து, பகலா இரவா என்ற மயக்கத்தை ஏற்படுத்தும். இந்த இரவுகளில் பேருந்து பயணம் என்றால் இன்னும் சுகம்.


வாழ்வின் நிலையாமயோ, அன்றாட வாழ்வு தரும் அச்சங்களோ என் மீது முழுமையாக கவிழும் போது நான் நாடி செல்வது இரவுகளைத்தான். இரவு தரும் பேரமைதி எல்லையில்லாதது, அது மீண்டும் என்னை கருவறைக்கு கூட்டிசெல்லுகிறது.


இந்த உலகின் முதல் மனிதனின் முதல் இரவு எப்படி இருந்திருக்கும் என்று என்றேனும் யோசித்திருக்கின்றீர்களா?

Thursday, September 18, 2008

Management Lesson?!

இந்த வாரம் படித்த ஒரு மிக முக்கியமான விஷயம்...

1. Never never forget about your position in the office as long as you stay inside the building.

2. Never give any chance or never make any fun with anybody who is not in your ranks, this especially holds good for other department peers.

3. Never allow them to tease you or make fun of you or give you nick names in front of your team or others for that matter, this will tarnish your image among your peers, most importantly among your team.

4. Remember you are leading a team, no matter how small it is, you are always sought by them for each and every matter, so make sure that you always maintain that pride.

5. When you happen to interact with other department peers, who are not in your RANK, make sure that you maintain a cordial "professional gap." Always remember that one day you may need to lead the whole group, at that time let us not give anybody a chance to recall how you behaved while you were in your current rank. So be professional in your approach when you talk with them.

சென்னை டு கோவை...

தமிழ்நாட்டில் பகல் நேர ட்ரைனில் நகரங்களுக்கு இடையில் பயணம் செய்வது வாழ்வின் மிக சுவராஸ்யமான இன்பங்களில் ஒன்று...

இந்த வாரம் சென்னையில் இருந்து கோவை சென்றேன். இது போன்ற வண்டிகள் எல்லாம் குழந்தைகளை, வயதானவர்களை, மற்றும் நோயாளிகளை கூட்டி செல்வதற்கு என்றே விடப்பட்டவை என்ற மனோபாவம் நம்முள் ஊறிவிட்டது. நாம் என்னதான் ரிசர்வ் செய்து கொண்டு போனாலும், (ஜன்னலோர சீட்!), நமக்கு அதே சீட் தான் கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் போன ஜென்மம் முழுக்க சிவன் கோவிலில் விளக்கிற்கு எண்ணெய் மட்டுமே ஊற்றிகொண்டிருந்திருக்க வேண்டும். இந்த முறை மனம் முழுக்க நடுக்கத்துடன் தான் வண்டியில் நுழைந்தேன், போன ஜென்மத்தில் திரி கூட போடவில்லை போலிருக்கிறது, என் சீட் முழுக்க குழந்தைகள், மொத்தம் மூன்று பேர், ஜன்னலோர சீட்டுக்காக (சத்தியமாய் என்னுடையது) சண்டை போட்டுகொண்டிருந்தார்கள்.

சீட்டின் அருகில் போய் நின்று கொண்டு பரிதாபமாக பார்த்து கொண்டிருந்த போது, எதிர் சீட்டில் இருந்தவர், உங்க நம்பர் என்ன சார் என்றார், அவர் குரலில் தெரிந்த கம்பீரதிற்கான காரணம் சற்று நேரம் கழித்து தெரிந்தது, சொன்னேன், திரும்பி பக்கத்து சீட்டில் அமர்த்திருந்த, சற்று பளிச்சென்று இருந்த பெண்ணிடம் சிரித்தவாறு சாருக்கு ஜன்னலோர சீட், நாம எல்லோரும் நம்ம சீட்டுக்கே போய்டலாம் என்றார், பிறகு என்னிடம் திரும்பி நீங்க உட்கார்ந்துக்கங்க சார் என்று அனுமதி கொடுத்தார். பளிச் பெண் குழந்தைகளிடம், சித்திகிட்ட வாங்க என்ற கூப்பிட அவர் குரலின் கம்பீரதிற்கான காரணம் புரிந்தது. இது கோவை வரும்வரை தொடர்ந்தது, ஒரு வழியாய் என் இருக்கையில் அமர்ந்தேன்.

அருகில் இருந்த சீட்டில் அமர்ந்திருந்தவர்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர், அவர்கள் முதலில் செய்த காரியம் ஒரு தொட்டிலை கட்டியதுதான்.

பிறகு முதலில் காபி, பிறகு டீ, மீண்டும் காபி, மீண்டும் டீ, அலை அலையாய் வரத் தொடங்கின சாப்பாட்டு விஷயங்கள், ட்ரைன் கோவை போய் சேரவே போவதில்லை என்பதை தெரிந்து கொண்டவர்களை போலவே சாப்பிட தொடங்கினார்கள். கோவை போய் சேரும் வரை இது ஓயவே இல்லை.

பிறகு CD முதல் கர்சீப் வரை விற்பனை தொடங்கியது. வெகு வேகமாக பயணம் செய்யும் நகரின் வீதியில் அமர்ந்திருப்பது போன்றதொரு எண்ணம் மனதில் உண்டாவதை தவிர்க்க இயலவில்லை.

மனதை நெருடிய, நெகிழவைத்த ஒரே ஒரு சம்பவம், நம் வீட்டில் செயற்கையாக நிலாவும், நட்சத்திரங்களையும் மேல் கூரையில் ஒளிர செய்யும் வண்ண sticker விற்பனை செய்த விழி இழந்த விற்பனையாளன். தான் பார்த்தே இராத, பார்கவே முடியாத, நீலமோ, கருப்போ, எந்த வண்ணமோ, எல்லாமே வெறும் சொற்கள் மட்டுமே என்று வாழும் அவர், ஒவ்வொரு முறையும் நிலா என்றும், நட்சத்திரம் என்றும் சொல்லும் போதும் அவர் மனதில் என்ன ஓடியிருக்கும் என்பதை யோசித்த போது, அத்தனை கோவில்களையும், மசூதிகளையும், சர்ச்சுகளையும் விற்று வரும் பணத்தில் இவர் போன்ற அனைவரையும் உட்கார வைத்து சோறு போட்டால் எந்த தெய்வமும் கோவித்துக்கொள்ளாது என்றே தோன்றியது.

Monday, September 8, 2008

யாதுமாகி நின்றாய்


நீங்கள் எனக்கு அளித்த, அளித்து கொண்டிருக்கும், அளிக்கப்போகும் அத்தனை சந்தோசத்திற்கும் நன்றி என்ற ஒரு வார்த்தை ஒப்புமை ஆகாது.

என்னைப் போன்ற ஏராளமான ஏகலைவர்களுக்கு துரோணர் நீங்கள், சிறு வித்தியாசம் நீங்கள் உங்கள் விரல்களை எங்களுக்கு கொடுத்து விட்டீர்கள்.


மனுஷ்ய புத்திரன் சொன்னதை போல், உங்கள் எழுத்துக்களைப் பற்றிக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை எங்களுக்கு...

Sunday, September 7, 2008

இரவின் நிசப்தம்




எனது மௌனமும்


உனது மௌனமும்


பேசிக்கொள்ளும் ஓசையது...

Thursday, September 4, 2008

ஊர்மிளையின் ராமாயணம்

ராமாயணத்தில் ராமனும் சீதையும் பிரிய ராவணனின் விதி காரணமா இல்லை லட்சுமணனின் மேல் ஊர்மிளை கொண்ட தீரா காதலும் அதன் வெளிப்பாடான அவள் உள்மன வெக்கையா?

சீதைகளை போற்றும் நாம் ஊர்மிளைகளை நினைவில் கொள்வதே இல்லை.

ராமாயணம் சீதையையும், ராமரையும், ராவணனையும், லட்சுமணையும் பற்றியது தான் என்றாலும் ஊர்மிளையின் பங்கும் எந்த வகையிலும் குறைந்ததல்ல, ஏன் ராமனின் வெற்றிக்கு எப்படி லட்சுமணன் முக்கிய பங்கு ஆற்றினாரோ அதற்கு சற்றும் சளைத்ததல்ல ஊர்மிளையின் பங்கு.

லட்சுமனனையாவது பட்டத்து விழாவில் பார்க்கலாம், ஊர்மிளையை...?

Tuesday, September 2, 2008

விநாயகர் சதுர்த்தி


நாளை கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு நமீதாவின் அருளுரையும், ஜெயம் கொண்ட பாவனாவின் வெற்றி கதைகளையும், இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று எல்லா தொலைக்காட்சியிலும் புத்தம் புதிய திரைப்படங்கள் போட்டும் விழா கொண்டாடும் இந்த நேரத்தில், விநாயகர் சில குறிப்புகள் எழுதுவது முக்கியம் ஆகிறது...


இந்துக் கடவுள்களில் முதன்மையானவரும், எல்லாவற்றிற்கும் மூலவரும், அறிவுக்கும், இலக்கியத்திற்கும், எந்த ஒரு விசயத்திலும் வெற்றி பெற அருள் புரிபவர் என்றும் காலம் காலமாக மக்களால் ஆழமாக நம்பப்பட்டுவரும், விநாயகர் என்றும், கணபதி என்றும், கணேசன் என்றும் பல்வேறு பெயர்களில் அன்போடு அழைக்கப்படும் இவரை கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே சிறீலங்காவில் உள்ளவர்கள் வழிபட்டு வந்துள்ளனர். எனினும் விநாயகர் என்ற பெயர் புராணங்களிலும், புத்த மத குறிப்புகளிலும் காணப்படுகின்றது. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில், குப்தர்களின் காலத்தில் இவரின் இப்போதைய உருவம் முழுமை பெற்றதாக நம்பபடுகின்றது. ஆறாம் நூற்றாண்டு முதல் இவர் ஒரு தனி கடவுளாக வழிபடப்பட்டார்.

இவருக்கு எப்படி இந்தத்உருவம் வந்தது என்பது பற்றி பல கதைகள் இருந்தாலும், பார்வதி குளிக்கும் போது, இவரை காவலுக்கு வைத்து சென்றதாகவும், அப்போது அங்கு வந்த சிவனை இவர் வழிமறித்தால், கோவப்பட்டு இவரின் தலையை வெட்டி விட்டதாகவும், பின்பு பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்க, தான் செல்லும் போது எந்த விலங்கு முதலில் தென்படுகிறதோ அதன் தலையை இவரின் உடம்பில் பொருத்துவதாக கூறி சென்றபோது எதிரில் முதலில் வந்த யானையின் தலையை வெட்டி வந்து பொருத்தியதாக கூறப்படும் கதையே பிரபலமானது (சிவன் தான் செய்த தவறுக்கு ஒரு தவறும் செய்யாத யானையின் தலையை வெட்டியது எந்த வகையில் நியாயம்?).

இன்று மிக பிரபலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி சத்ரபதி சிவாஜி அவர்கள் காலத்தில் முதன் முதலில் கொண்டாடப்பட்டு, வெள்ளையரின் வருகைக்கு பின் மெல்ல தன் பிரபல்யத்தை இழந்து, மீண்டும் லோகமான்ய திலகரால் சுதந்திர போராட காலத்தில், சுதந்திர தாகத்தை ஊட்ட பயன்படுத்தப்பட்டு, இன்று தன்னுடைய மதத்தின் வலிமையை பறைசாற்றவும், அரசியல்வாதிகளுக்கு தன்னுடைய வலிமையை பரிசோதித்து கொள்ளவும், ஒரு நாள் லீவ் என்று சந்தோசம் கொள்ளவும் பயன்படுவதாக மாறிவிட்டது. --தொடரும்

Saturday, August 30, 2008

சில கேள்விகள்...

முக்கிய குறிப்பு: இது எந்த ஒரு சமுதாயத்தினருக்கும் எதிராகவோ, இல்லை இன்னொரு சமுதாயத்தினருக்கு ஆதரவாகவோ எழுதப்பட்டது அல்ல. இந்துக்கள், இஸ்லாமியர், இல்லை எந்த சமுதாயத்தினரின் பெயரையும் இதில் போட்டுக்கொள்ளலாம்.

"ஒரிசாவில் கிறிஸ்துவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன - செய்தி"
சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மேல் மத ரீதியான வன்முறை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றாலும் மேற்கண்ட செய்தி சில கேள்விகளை எழுப்ப தவுறுவதில்லை.

உங்களின் நியாயமான கோரிக்கைகைகளை வலியுறுத்த சட்டத்திற்கு உட்பட்டு வேறு நிறைய வழிமுறைகள் இருக்கும் பொழுது பள்ளி, கல்லுரிகளை மூடுவது எந்த வகையில் நியாயம், எந்த தவறும் செய்யாத, இதில் எந்த வகையிலும் சம்மந்தப் படாத, ஆயிரக்கணக்கான மாணவர்களின் நியாயமான, அடிப்படை உரிமையான கல்வி கற்கும் உரிமையை தடை செய்தல் எந்த வகையில் சரி? இதற்கான அனுமதியை, அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்து?

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காவது எதற்காக இதை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் சக்தி உண்டு, பள்ளி மாணவர்களின் நிலை என்ன? இது இந்த வயதில் அவர்கள் மனதில் நஞ்சை விதைக்காதா? ஏன் என்றால் அவர்களுக்கு இந்த செய்தி முழுமையாக போய் சேர போவதில்லை. அரைகுறையாக தெரிந்துகொள்வது அதிக ஆபத்தை விளைவிக்கும் என்று உங்களுக்கு தெரியாதா?

உங்கள் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்துவ மதத்தினரின் குழந்தைகள் மட்டும் படிப்பதில்லை, எல்லா மதத்தினரும் தான் படிக்கின்றனர், உங்களிடம் படிக்க வந்த காரணத்திற்காக மட்டும் உங்களுக்கு ஆதரவாக வெய்யிலில் கைகோர்த்து நிற்க வைப்பது எந்த வகையில் நியாயம்? உங்களுடன் அன்று பேரணியில் வந்த அத்தனை பேரும் உங்களுக்கு ஆதரவாக முழுமையான மனதுடன் வந்தார்களா?

தமிழ்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றீர்கள் என்றுதான் நம்புகிறோம், அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் நீங்கள் விடுமுறை அளித்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

மற்ற சமுதாயத்தினருக்கு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டீர்கள் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?

கோவில், பள்ளி எல்லாம் ஒன்று, இரண்டு இடத்திலும் தெய்வங்கள் தான் வாழ்கின்றன. நம்முடைய அத்தனை கசப்புகளையும், மத வெறுப்புகளையும், ஆசைகளையும், துரோகங்களையும், தனி மனித இசைகளையும், ஆழ் மனதில் படிந்திருக்கும் மிருக குணத்தையும் நம் பள்ளிகளின் சுவர்களுக்கு வெளியே வைத்து கொள்வோம், இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும், ஏனென்றால் அங்கே தான் நம் அடுத்த தலைமுறை செதுக்கப்படுகிறது. அணுகுண்டு போடுவதும் இதுவும் சற்றேறக்குறைய ஒன்றுதான் இரண்டுமே தலைமுறைகளை தாண்டி தொடரும் விஷ(ய)ம்.

Thursday, August 28, 2008

விடியல்



நிலவு தேடி ஏமாந்து


வெண் நட்சத்திரப் பலிக்கொண்டு


மேனியெங்கும் சிவப்பு ரத்தம் பூசி


ஒற்றைக்கண் ராட்சசன் ஆகெ விடியல் வந்தான்

Wednesday, August 27, 2008

விமர்சனம்?!

நேற்று 11 வருடங்கள் கழித்து மீண்டும் காதலுக்கு மரியாதை பார்த்தேன். அப்போது பட்டுக்கோட்டையில் பார்த்தேன், கல்லூரியில் இருந்து, காலேஜ் இருந்தது தஞ்சாவூரில், 80 KM பயணம் செய்து இந்த படத்தை பார்த்தேன் என்பது இப்போது என்னை சற்று வியப்புற செய்கிறது. இது நல்ல இசையால் நல்ல படம் என்ற பெயரை பெற்றது என்பது இப்போது தான் புரிகிறது, சில நல்ல நடிகர்களினாலும், ஒரு சில நல்ல வசனங்களாலும், மீதி இருக்கும் அத்தனை குறைகளையும் மழுப்பி விடுகிறது இசை. ஒரு சில நடிகர்களை தவிர, விரல் விட்டே எண்ணி விடலாம் தமிழ் நடிகர்களை, மற்ற எல்லோரும் மலையாள நடிகர்கள், நல்ல வேளை வசனம் எல்லாம் தமிழ். சில காட்சிகள் மிக சிறந்த நகைச்சுவை படத்தின் சாரத்தை கொண்டு விளங்குவது இந்த படத்தின் சிறப்பு அம்சமாகும், உதாரணமாக கதாநாயகனும் கதாநாயகியும் பிரிவதாக முடிவு செய்த பின்பு அவர்கள் நண்பர்கள் இருவரும் பேசும் வசனங்கள், குறிப்பாக கேசவனாக நடிக்கும் சார்லீ பேசுவது, அதுவும் விஜய் அவரிடம் போய் தயக்கத்துடன் பேச தொடங்கும் போது, சார்லீ பேசும் வ்சனங்கள், ஒரு பானை சோற்றுக்கு... என்னதான் ஹீரோவாக இருந்தாலும் ஷாலினியை விட விஜய் லிப்‌ஸ்டிக் அதிகம் யூஸ் பண்ணியிருக்கக் கூடாது, படம் முழுவதும் அவர் அவ்வாறே வருவதும் நம்மை மகிழ்விக்கததான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எனினும் எல்லாவற்றாயும் தாண்டி தன்னுடய பாடல்களாலும், குறிப்பாக பின்னணி இசை, இப்போது இருக்கும் (முன்னணியில் ?!) இசை அமைப்பாளர்களுக்கு ஒரு பாடம், க்ளைமாக்ஸில் ஸ்றீவித்யா ஷாலினியிடம் நடந்து செல்லும்போது 5 செக்கேண்டு ஒலிக்கும் அந்த தபெலா, அதற்கு முந்தைய காட்சியில் ஸ்ரீவித்யா கூப்பிடும் போது விஜய் காட்டும் முக பாவனைகளையும் மறக்க செய்கிறது, இளையராஜாவிற்கு என் வந்தனங்கள்.

தனிமை




ஒரு மழை துளியின் தனிமை கொண்டு அலையும்

என் வாழ்வை உயிர்பிக்கும் உயிரோசை

உன் தொலைபேசி அழைப்பு

Tuesday, July 15, 2008

On a lonely rainy evening with a hot cup of tea my fingers wandered on the keyboard with wavering thoughts over life. Rain hit the earth with vehemence...