Tuesday, September 2, 2008

விநாயகர் சதுர்த்தி


நாளை கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு நமீதாவின் அருளுரையும், ஜெயம் கொண்ட பாவனாவின் வெற்றி கதைகளையும், இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று எல்லா தொலைக்காட்சியிலும் புத்தம் புதிய திரைப்படங்கள் போட்டும் விழா கொண்டாடும் இந்த நேரத்தில், விநாயகர் சில குறிப்புகள் எழுதுவது முக்கியம் ஆகிறது...


இந்துக் கடவுள்களில் முதன்மையானவரும், எல்லாவற்றிற்கும் மூலவரும், அறிவுக்கும், இலக்கியத்திற்கும், எந்த ஒரு விசயத்திலும் வெற்றி பெற அருள் புரிபவர் என்றும் காலம் காலமாக மக்களால் ஆழமாக நம்பப்பட்டுவரும், விநாயகர் என்றும், கணபதி என்றும், கணேசன் என்றும் பல்வேறு பெயர்களில் அன்போடு அழைக்கப்படும் இவரை கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே சிறீலங்காவில் உள்ளவர்கள் வழிபட்டு வந்துள்ளனர். எனினும் விநாயகர் என்ற பெயர் புராணங்களிலும், புத்த மத குறிப்புகளிலும் காணப்படுகின்றது. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில், குப்தர்களின் காலத்தில் இவரின் இப்போதைய உருவம் முழுமை பெற்றதாக நம்பபடுகின்றது. ஆறாம் நூற்றாண்டு முதல் இவர் ஒரு தனி கடவுளாக வழிபடப்பட்டார்.

இவருக்கு எப்படி இந்தத்உருவம் வந்தது என்பது பற்றி பல கதைகள் இருந்தாலும், பார்வதி குளிக்கும் போது, இவரை காவலுக்கு வைத்து சென்றதாகவும், அப்போது அங்கு வந்த சிவனை இவர் வழிமறித்தால், கோவப்பட்டு இவரின் தலையை வெட்டி விட்டதாகவும், பின்பு பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்க, தான் செல்லும் போது எந்த விலங்கு முதலில் தென்படுகிறதோ அதன் தலையை இவரின் உடம்பில் பொருத்துவதாக கூறி சென்றபோது எதிரில் முதலில் வந்த யானையின் தலையை வெட்டி வந்து பொருத்தியதாக கூறப்படும் கதையே பிரபலமானது (சிவன் தான் செய்த தவறுக்கு ஒரு தவறும் செய்யாத யானையின் தலையை வெட்டியது எந்த வகையில் நியாயம்?).

இன்று மிக பிரபலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி சத்ரபதி சிவாஜி அவர்கள் காலத்தில் முதன் முதலில் கொண்டாடப்பட்டு, வெள்ளையரின் வருகைக்கு பின் மெல்ல தன் பிரபல்யத்தை இழந்து, மீண்டும் லோகமான்ய திலகரால் சுதந்திர போராட காலத்தில், சுதந்திர தாகத்தை ஊட்ட பயன்படுத்தப்பட்டு, இன்று தன்னுடைய மதத்தின் வலிமையை பறைசாற்றவும், அரசியல்வாதிகளுக்கு தன்னுடைய வலிமையை பரிசோதித்து கொள்ளவும், ஒரு நாள் லீவ் என்று சந்தோசம் கொள்ளவும் பயன்படுவதாக மாறிவிட்டது. --தொடரும்

No comments: