Sunday, March 14, 2010

ஐ.பி.எல்.

உண்மையில் திருவிழாதான். என் அறையின் ஜன்னல் வழியே தெரியும் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து தெறிக்கும் இசையும், விண்ணை பிளக்கும் கூச்சலும் அதைதான் நினைவுபடுத்துகின்றது... இரவு எட்டு மணிக்கு தொடங்கபோகும் போட்டிக்கு இரண்டு மணி முதலே வரத்தொடங்கி விட்டார்கள். ஒரு வாரமாய் இரவு, பகலாக மின்னொளியில் ஸ்டேடியத்தை புதுப்பிக்கும் பணி... அடிப்படையாய் இருப்பது ஒரே விஷயம் ...பணம்...விளையாடும் விருப்பம், அதற்கென்று இருக்கும் தனி சுவை எல்லாமுமே பணத்திற்கு பின்தான் வருகிறது இந்த திருவிழாவை பொறுத்தவரை...லலித் மோடி என்னும் மிகபெரிய வியாபாரியிடம் சிக்கி உள்ளது கிரிக்கெட்.

விளையாட்டு என்பதை முதன்முதலில் மனிதன் உணர்ந்தபோது அதை ஒரு கலையாய்தான் நினைத்திருக்க வேண்டும்...வேறு எந்தவொரு காரணமும் விளையாட்டை மனிதஇனம் பின்தொடர காரணமாக இருந்திருக்க முடியாது. நிச்சயம் பணம் ஒரு காரணமாக இருந்திருக்க முடியாது. எல்லாமும் தலைகீழாக மாறி விட்டது. இதன் மிகபெரிய வெற்றிக்கு மிகமுக்கிய காரணம், இன்றைய இந்திய மக்கள் தொகையில் பாதி அளவு இருக்கும் 30 வயதிற்க்கு குறைவானவர்கள்தான், அதைவிட முக்கியம் அவர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு அதிகமான பணம், என்ன செய்வதென்று தெரியாமல், ஏதாவது செய்ய வேண்டும் என்று இருப்பவர்களுக்கு எல்லாவற்றையும் கவர்ச்சி கலந்து கொடுக்கும் இது மிகவும் ஈர்த்தது வியப்பேதும் இல்லைதான்.

கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை, அதனினும் கொடிது இளமையில் செல்வம். அதுதான் இந்த தேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின் முதல் 20 வருடங்கள் அமெரிக்காவில் ஏற்பட்ட நிலையில் நம் இளைஞர்கள் இன்று இருக்கிறார்கள். இளமை, அதுகொடுக்கும் வேகம், தைர்யம், கிறுக்குத்தனம், இதை எல்லாம் தாங்க பணம்...எனினும் வருடம் முழுதும் பூ பூக்கும், ஏதேனும் ஒரு இடத்தில மழை பெய்து கொண்டே இருக்கும், ஆழமான 2000 வருட பாரம்பரியம் கொண்ட இந்த தேசம் இதையும் தாங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தாங்க வேண்டும்.

ஒரு வாரமாக நான் கவனித்து வரும் விஷயம், இரவு முழுவதும் எரியும் இந்த ராட்சச விளக்குகள் என் அறையின் எதிரில் ஸ்டேடியத்தில் இருக்கும் மரங்களில் வசிக்கும் காகங்களின் தூக்கத்தை மட்டுமல்ல அவைகளின் இரவு பகல் சுழற்சியையும் மாற்றி விட்டது, இரவு முழுக்க அவைகள் பறப்பதும், பிறகு இரவு இன்னமும் உள்ளது என்று உணர்ந்து பதறிபோய் மீண்டும் கூடு திரும்புவதுமாய் உள்ளன, நாரைகள் வேறு விளக்கை சுற்றி சுற்றி பறந்துகொண்டே இருக்கின்றன, இரவு முழுவதும். சூரியன் வரும் போது அவைகள் என்ன செய்தன என்று தெரியவே இல்லை, எப்படி உணவை தேடிக்கொண்டன என்று லலித் மோடிக்கு தெரிந்தால் சொல்லலாம். வலிமையானவை மட்டுமே வாழும் என்ற நிலைபாட்டை இப்பொழுது இந்த கிரகத்தை ஆட்சி செய்யும் மனித விலங்குகள் நாள்தோறும் நிருபித்து கொண்டே இருக்கின்றன, ஏறத்தாழ பாதிக்குமேல் போய் விட்டது, மீதி இருக்கபோவது இந்த விலங்குகள் மட்டும்தான், அழிக்க எதுவும் இல்லாத நிலயில் தன்னுடைய கூட்டத்தையே அழிக்க தொடங்கும், ஏற்கனவே அதை தொடங்கியும் விட்டோம்.

Saturday, March 13, 2010

கிறுக்கல்கள் 5

காத்திருப்பு...
தெறிக்கும் அலைகளின்
துளிகளில் சிதறும் உன்முகம்
விரல்களில் உதிரும்
மணல்துகள்களாய்
ஞாபகங்கள் நழுவும்...
இமைகளின் ஓரம்
நினைவுகள் நீராய் தேங்கும்...
கடிகாரத்தின் முட்கள் குத்தி
இதயத்தில் ரத்தம் கசியும்...
காதல் என்பது மெல்லச்சாதல்...

கிறுக்கல்கள் 4

மௌனம் கொண்டு...
மௌனம் உணர்த்தும் அர்த்தங்களை
சொற்கள் என்றுமே
முழுமையாக செய்வதில்லைதான்...
துளி மௌனம் போதும்...
துளி விஷத்தை போல..

சொற்கள் கோர்க்கும்
மாலைகளை விட
மௌனம் கோர்க்கும்
சங்கிலி வலுவானதுதான்
கரங்களை இணைக்கவும்...
கழுத்தை நெறிக்கவும்...

பூக்களை பறிப்பதுபோல்
என் வார்த்தைகளை பறித்துக்கொண்டு
மௌனத்தை அளித்துவிட்டாய்
உன்மேலான என் காதலுக்கு பரிசாக...
பூப்பறித்தல் பூஜைக்கு என்றாலும்
செடிக்கு அது ஊனம்தான்...

கிறுக்கல்கள் 3

உன்னுடன் இருக்கும்போது மட்டுமே
என்னுடன் இருப்பதாய் உணர்கிறேன்...

நீ ஆடைகளை துறந்துவிட்டு
வெட்கத்தை அணிந்து கொண்டாய்...
நான் உன்னை அணிந்துகொண்டு
வெட்கத்தை துறந்துவிட்டேன்...

எரியாத விளக்கொன்றின் கீழ்
எரிந்து கொண்டிருந்தோம் நாம்...

நீ கவனித்து கவனித்து
உடுத்துபவை தான்
என் கவனம் கலைக்கின்றன...

ஒரு வருடம்....

ஏறக்குறைய ஒரு முழு வருடம் கழித்து எழுதுகிறேன்.

எத்தனை மாற்றங்கள் தனி மனித வாழ்விலும், சமுதாயத்திலும்...

இப்போதெல்லாம் மாற்றங்கள் ஏற்பட நாட்கள், ஏன் நிமிடங்களே போதுமானதாக இருக்கிறது...1900 முதல் 1999 வரை ஏற்பட்ட அதே அளவு மாற்றங்கள் ௦ கடந்த 10 வருடங்களில் ஏற்பட்டுள்ளது...மனிதர்களுக்கிடையேயான விரிசலும் தான்...நிறைய இழந்து கொஞ்சம் பெற்றுள்ளோம்...பெற்றுள்ளவையும் கொஞ்சம் நேரமே நிலைக்கும் தன்மை கொண்டதாக இருப்பது இன்னமும் விசேசம்...

கடந்த ஒரு வருடத்தில்.... ஒபாமா பதவி ஏற்ற கையுடன் நோபெல் பரிசு வாங்க விமானம் ஏறினார், அதே நேரம் ஈராக்கில் இருந்தும், ஆப்கனிஸ்தானில் இருந்தும் விமானகள் கிளம்பி இருக்கும், இறந்து போன அமெரிக்க வீரர்களின் பிணங்களுடன்... மூன்று விமானங்களும் நாடு வானில் சந்தித்து கொண்டனவா என்று தெரியவில்லை...This is not the change we want. நோபெல் கேலிக்குரிய விசயமாக போனது.

மே 17, சிறிலங்காவில் நடைபெற்ற போரின் இறுதி நாள் என்று சிங்கள அரசாங்கம் சொல்லுகிறது, பிரபாகரன் மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது...இன்னமும் வருவர் என்று எல்லோரும் எதிர்பர்ர்கின்றனர்...இது இரண்டு விசயங்களை தெளிவு படுத்துகின்றது.. ஒன்று அவர் மிகபெரிய தலைவராக இருந்துள்ளார்...மற்றொன்று தனக்கு பிறகு யார் தலைவர் என்பதை தெளிவாக சொல்லவில்லை... யாரும் சாகாவரம் பெற்று வருவதில்லை...எல்லா புரட்சியாளர்களும் தங்கள் வாழ்நாளிலேயே விரும்பும் மாற்றத்தை அடைவதும் இல்லை, எனவே அடுத்த தலைவர் என்று ஒருவர் வேண்டும் எல்லா இடங்களிலும்...இதுதான் இலங்கை தமிழர் முன் உள்ள மிகபெரிய சோகம்.

தமிழ்நாட்டில்....பாசகார தலைவனுக்கு 365 நாளில் 371 பாராட்டு விழாக்கள். கொடநாடு செல்லும் ரோடு எல்லாம் தேய்ந்து போய்விட்டது, ADMK தலைமையகம் அங்கே மாற்ற பட்டுவிட்டதால்....

ஸ்டாலின் துணை முதல்வர்...சீக்கிரம் முதல்வர் ஆக வாழ்த்துக்கள்...கருணாநிதி தன்னுடைய காலத்திலேயே இதை செய்வார் என்று நம்புகிறேன்...இல்லையென்றால்...

தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமை 73,௦000௦௦ கோடியாக உயர்ந்துவிட்டது. எனக்கு ஏற்கனவே இருக்கும் சொந்த கடன் 13,000 உடன் மேலும் 10,000 சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்... உங்கள் தலையில் உள்ள கடனின் அளவு...அரசாங்கம் மூலம் 10,000 ரூபாய்... வாழ்த்துக்கள்.

டாஸ்மாக்கில் விற்பனை நாளொரு சாதனையும் பொழுதொரு போதையுமாக வளர்கிறது... பெரியார் கள்ளுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய தென்னந்தோப்பை வெட்டி எறிந்ததாக படித்ததாக ஞாபகம்...பெரியார் வழி, பெரியார் கொள்கையில் ஆட்சி நடத்துவதாக கூறி கொள்ளும் இந்த ஆட்சியில் டாஸ்மாக் நடத்துவதும் அவர்கள் தான்...இப்போதெல்லாம் இது போன்ற மாற்றங்கள் மட்டுமே நடக்கிறது...

இன்னமும் நிறைய இருக்கிறது இந்த ஒரு வருடம் பற்றி எழுத..தொடரும் போடும் முன்....Love you all...

இனி தொடர்ந்து சந்திப்போம் என்கிற நம்பிக்கையுடன்...