Saturday, August 30, 2008

சில கேள்விகள்...

முக்கிய குறிப்பு: இது எந்த ஒரு சமுதாயத்தினருக்கும் எதிராகவோ, இல்லை இன்னொரு சமுதாயத்தினருக்கு ஆதரவாகவோ எழுதப்பட்டது அல்ல. இந்துக்கள், இஸ்லாமியர், இல்லை எந்த சமுதாயத்தினரின் பெயரையும் இதில் போட்டுக்கொள்ளலாம்.

"ஒரிசாவில் கிறிஸ்துவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன - செய்தி"
சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மேல் மத ரீதியான வன்முறை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றாலும் மேற்கண்ட செய்தி சில கேள்விகளை எழுப்ப தவுறுவதில்லை.

உங்களின் நியாயமான கோரிக்கைகைகளை வலியுறுத்த சட்டத்திற்கு உட்பட்டு வேறு நிறைய வழிமுறைகள் இருக்கும் பொழுது பள்ளி, கல்லுரிகளை மூடுவது எந்த வகையில் நியாயம், எந்த தவறும் செய்யாத, இதில் எந்த வகையிலும் சம்மந்தப் படாத, ஆயிரக்கணக்கான மாணவர்களின் நியாயமான, அடிப்படை உரிமையான கல்வி கற்கும் உரிமையை தடை செய்தல் எந்த வகையில் சரி? இதற்கான அனுமதியை, அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்து?

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காவது எதற்காக இதை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் சக்தி உண்டு, பள்ளி மாணவர்களின் நிலை என்ன? இது இந்த வயதில் அவர்கள் மனதில் நஞ்சை விதைக்காதா? ஏன் என்றால் அவர்களுக்கு இந்த செய்தி முழுமையாக போய் சேர போவதில்லை. அரைகுறையாக தெரிந்துகொள்வது அதிக ஆபத்தை விளைவிக்கும் என்று உங்களுக்கு தெரியாதா?

உங்கள் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்துவ மதத்தினரின் குழந்தைகள் மட்டும் படிப்பதில்லை, எல்லா மதத்தினரும் தான் படிக்கின்றனர், உங்களிடம் படிக்க வந்த காரணத்திற்காக மட்டும் உங்களுக்கு ஆதரவாக வெய்யிலில் கைகோர்த்து நிற்க வைப்பது எந்த வகையில் நியாயம்? உங்களுடன் அன்று பேரணியில் வந்த அத்தனை பேரும் உங்களுக்கு ஆதரவாக முழுமையான மனதுடன் வந்தார்களா?

தமிழ்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றீர்கள் என்றுதான் நம்புகிறோம், அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் நீங்கள் விடுமுறை அளித்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

மற்ற சமுதாயத்தினருக்கு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டீர்கள் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?

கோவில், பள்ளி எல்லாம் ஒன்று, இரண்டு இடத்திலும் தெய்வங்கள் தான் வாழ்கின்றன. நம்முடைய அத்தனை கசப்புகளையும், மத வெறுப்புகளையும், ஆசைகளையும், துரோகங்களையும், தனி மனித இசைகளையும், ஆழ் மனதில் படிந்திருக்கும் மிருக குணத்தையும் நம் பள்ளிகளின் சுவர்களுக்கு வெளியே வைத்து கொள்வோம், இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும், ஏனென்றால் அங்கே தான் நம் அடுத்த தலைமுறை செதுக்கப்படுகிறது. அணுகுண்டு போடுவதும் இதுவும் சற்றேறக்குறைய ஒன்றுதான் இரண்டுமே தலைமுறைகளை தாண்டி தொடரும் விஷ(ய)ம்.

Thursday, August 28, 2008

விடியல்



நிலவு தேடி ஏமாந்து


வெண் நட்சத்திரப் பலிக்கொண்டு


மேனியெங்கும் சிவப்பு ரத்தம் பூசி


ஒற்றைக்கண் ராட்சசன் ஆகெ விடியல் வந்தான்

Wednesday, August 27, 2008

விமர்சனம்?!

நேற்று 11 வருடங்கள் கழித்து மீண்டும் காதலுக்கு மரியாதை பார்த்தேன். அப்போது பட்டுக்கோட்டையில் பார்த்தேன், கல்லூரியில் இருந்து, காலேஜ் இருந்தது தஞ்சாவூரில், 80 KM பயணம் செய்து இந்த படத்தை பார்த்தேன் என்பது இப்போது என்னை சற்று வியப்புற செய்கிறது. இது நல்ல இசையால் நல்ல படம் என்ற பெயரை பெற்றது என்பது இப்போது தான் புரிகிறது, சில நல்ல நடிகர்களினாலும், ஒரு சில நல்ல வசனங்களாலும், மீதி இருக்கும் அத்தனை குறைகளையும் மழுப்பி விடுகிறது இசை. ஒரு சில நடிகர்களை தவிர, விரல் விட்டே எண்ணி விடலாம் தமிழ் நடிகர்களை, மற்ற எல்லோரும் மலையாள நடிகர்கள், நல்ல வேளை வசனம் எல்லாம் தமிழ். சில காட்சிகள் மிக சிறந்த நகைச்சுவை படத்தின் சாரத்தை கொண்டு விளங்குவது இந்த படத்தின் சிறப்பு அம்சமாகும், உதாரணமாக கதாநாயகனும் கதாநாயகியும் பிரிவதாக முடிவு செய்த பின்பு அவர்கள் நண்பர்கள் இருவரும் பேசும் வசனங்கள், குறிப்பாக கேசவனாக நடிக்கும் சார்லீ பேசுவது, அதுவும் விஜய் அவரிடம் போய் தயக்கத்துடன் பேச தொடங்கும் போது, சார்லீ பேசும் வ்சனங்கள், ஒரு பானை சோற்றுக்கு... என்னதான் ஹீரோவாக இருந்தாலும் ஷாலினியை விட விஜய் லிப்‌ஸ்டிக் அதிகம் யூஸ் பண்ணியிருக்கக் கூடாது, படம் முழுவதும் அவர் அவ்வாறே வருவதும் நம்மை மகிழ்விக்கததான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எனினும் எல்லாவற்றாயும் தாண்டி தன்னுடய பாடல்களாலும், குறிப்பாக பின்னணி இசை, இப்போது இருக்கும் (முன்னணியில் ?!) இசை அமைப்பாளர்களுக்கு ஒரு பாடம், க்ளைமாக்ஸில் ஸ்றீவித்யா ஷாலினியிடம் நடந்து செல்லும்போது 5 செக்கேண்டு ஒலிக்கும் அந்த தபெலா, அதற்கு முந்தைய காட்சியில் ஸ்ரீவித்யா கூப்பிடும் போது விஜய் காட்டும் முக பாவனைகளையும் மறக்க செய்கிறது, இளையராஜாவிற்கு என் வந்தனங்கள்.

தனிமை




ஒரு மழை துளியின் தனிமை கொண்டு அலையும்

என் வாழ்வை உயிர்பிக்கும் உயிரோசை

உன் தொலைபேசி அழைப்பு