Saturday, March 28, 2009

ஞாயிற்றுகிழமைகளின் காலைகளில்...

பொதுவாகவே ஒரு நிச்சயமற்ற சோம்பல் உடலை ஆட்கொண்டிருக்கும்...வெய்யில்கால மத்தியான வேளைகளில் அசைந்துகொண்டிருக்கும் மரங்களின் இலைகளை போல...

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது காணும் காட்சிகள் நிச்சயம் இன்பம் அளிப்பவையாக இருக்கின்றது...

30களின் மத்தியில் வயதை கொண்டிருக்கும் கணவனும் மனைவியும் சேர்ந்து செல்லும் காட்சியில் என்னை முதலில் கவர்வது பெண்ணின் முகத்தில் தெரியும் உற்சாகமும், கணவனை அடிகொருமுறை உரிமையோடு தொட்டு பேசுவதும், நடையில் உள்ள சின்ன துள்ளலும், கழிந்த இரவின் "காதல்" இன்னமும் உள்ளத்தில் ஓடிகொண்டிருகின்றது என்பதை காட்டும்...

கணவனின் முகத்திலோ முழுமையான அமைதியை காணலாம்... வரலாற்றின் பக்கங்கள் முழுக்க காணப்படும், பெண்களால், பெண்களுக்காக, பெண்ணை முன்னிறுத்தி நடைபெற்ற அத்தனை போர்களும் இந்த "அமைதிக்காக" என்ற எண்ணம் மனதில் எழும்...

எனகென்னவோ ஒரு பெண்ணை அடைவதில் ஆணுக்கிருக்கும் இன்பத்தைவிட... தான் விரும்பும் ஆண் தன்னை அடைந்தபின் அதை நினைத்துபார்த்து பெண் அடையும் இன்பம் மிக அதிகம் என்றே தோன்றுகிறது...
********************************************************************************* இலக்கியங்கள் எல்லாம் நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியில் தான் நிகழ்கின்றன என்பதில் எனக்கு என்றுமே நம்பிக்கை உண்டு... அதை மேலும் உறுதி செய்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றை இந்த வாரம் சந்தித்தேன்...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் தன் பேருந்தின் குறுக்கே வந்துவிட்ட ஒரு வயதான பெண்மணியை சென்னை செந்தமிழில் திட்டிய ஒரு டிரைவருக்கு அந்த அம்மா கொடுத்த பதில்...

"இந்த மாதிரி கொழுப்பெடுத்து பேசறதுக்குத்தான் ஆண்டவன் உன்னை இப்படி மழையிலும் வெய்யிலிலும் செக்கிழுக்க வெச்சிருக்கான்..."

டிரைவர் பஸ் ஓட்டுவதை என்றேனும் இந்த கோணத்தில் பார்த்திருக்கின்றீர்களா?

Monday, March 23, 2009

தேர்தல் திருவிழா...

ஒரு வழியாக தேர்தல் திருவிழா தொடங்கி விட்டது... இனி கொஞ்சநாட்களுக்கு மிக சிறப்பாக பொழுது போகும்...

தமிழ் நாட்டில் சொல்லவே வேணாம்... ஏற்கனவே இரண்டு செஞ்சட்டை தோழர்களும் போயஸ் தோட்டத்து ஆதி பராசத்தியிடம் சேர்ந்து விட்டனர்... ஆதி பராசத்திக்கும் சிவப்புதான் பிடித்த கலர், எங்களுடையதும் சிவப்புதான், எனவேதான் சேர்ந்து விட்டோம் என்று காரணம் சொல்லிவிட்டார்கள்... அவர்களை சொல்லியும் தப்பில்லை.. ஒவ்வொரு தேர்தலுக்கும் என்ன காரணம் தான் அவர்களால் சொல்ல முடியும்...

மருத்துவர் அய்யாவிற்கு இந்த தொந்தரவுகள் எல்லாம் இல்லவே இல்லை.. ஏன் என்றால் அவர் சொல்லும் காரணங்களை யாருமே நம்புவதுமில்லை, மதிப்பதுமில்லை... இது அவருக்கும் மிக நன்றாக தெரியும்...

இறுதியாக மிஞ்சுவது... நம்ம கருப்பு எம்ஜியார்... கேப்டன் டீவீக்கு அனுமதியும், 16 சீட்டும், தேர்தல் செலவிற்கு பணமும் கொடுத்தால்.. அன்னை சோனியா காந்திதான் இந்தியாவை வாழ வைக்க வந்த தெய்வம் என்று சொல்ல ரெடியாக இருக்கிறார்...

இந்த ஓட்டு பொறுக்கிகளுக்கு எதுவும் சம்மதமே...

உலகின் மிகபெரிய ஜனநாயக (?) நாட்டின் தேர்தல் முறைகள் மிகவும் மேம்பட்டவை தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை... சில புள்ளி விபரங்கள்...

சுமார் இருபது லட்சம் வீரர்கள் பாதுகாப்புக்கு உபயோகப்படுத்த படுவார்கள்...

சுமார் 8000 கோடி ரூபாய்கள் செலவழிக்கப்படும் (கவனிக்க, இது தேர்தல் கமிசனால் செலவு செய்யப்படும் அரசாங்க பணம்...)

நமது நாட்டில் ஓட்டு உரிமை உள்ளவர்களின் எண்ணிக்கை அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம்...

தேர்தலுக்காக நம்ம அரசியல்வாதிகள் செலவிடும் தொகை ஏறத்தாழ 15000 கோடிகள் இருக்கும் என்று மதிப்பிட பட்டுள்ளது.. (பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தொகை... 35 லட்சங்கள்!?)

இரநூறு டன் அழியாத மை தேவைப்படும்...

வாழ்க இந்திய ஜனநாயகம்... வளர்க பாரத நன்னாடு...

Sunday, March 1, 2009

எல்லோரும் நலமா?

அப்புறம் எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கள் (எனக்கு தெரிந்து என்னை தவிர யாரும் இதை படிப்பதில்லை) இருந்தாலும் கேட்டு வைப்போம்.

இலங்கையில் தமிழர்கள் இறக்கும் எண்ணிக்கையும், கிரிக்கெட் ஸ்கோரும் நமக்கு கிட்டத்தட்ட ஒன்றே என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

அந்த பிரச்சனைக்கு ஒரு வழி சொல்வார்கள் என்று பார்த்தால், இங்கு இருக்கும் உலகத் தமிழர்களின் ஒரே ஒப்பற்ற தலைவரும், லெனினுக்கு பிறகு தோன்றிய ஒரே புரட்சியாளர் என்பதால் புரட்சிதலைவி என்று அழைக்கபடுபவரும் இங்கு அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் பிரபாகரனும், ராஜபக்சேயும் எங்கள் பிரச்சனைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்கிறோம் தயவு செய்து நீங்கள் சிரமப்படாதீர்கள் என்று அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை...

இதற்கிடையில் தன் மகன் ஒரு மத்திய மந்திரி என்ற நினைவே நமக்கு வரக்கூடாது என்பதற்காக அவரை தமிழ்நாட்டில் இருட்டடிப்பு செய்த திரு. அய்யா ராமதாசை நான் மனதார பாராட்டுகிறேன். கடைசியாக அவர் புகைப்படம் பேப்பரில் வந்தது அன்புமணி அவர்கள் தன் குடும்பத்துடன் பொற்கோவிலுக்கு விஜயம் செய்ததுதான், அடுத்த முறையும் மந்திரியாக வேண்டும் என்று வேண்டி இருக்கலாம்...

இன்னமும் நிறைய இருக்கிறது... இது இன்னமும் முடியவில்லை...

இங்கேயும் போராட்டம் தான் தன் குடும்பம், செல்வாக்கு, ஆட்சி, சொத்து ஆகியவற்றை காப்பாற்ற...

அங்கேயும் போராட்டம் தான் தன் உயிர், கற்பு, வாழ ஒரு இடம்,,. சுதந்திரமான காற்று... எது ஜெயிக்கும் எண்டு சொல்லுங்கள்..