Wednesday, September 24, 2008

இரவு


இருள் என்பது குறைந்த ஒளி - - பாரதி


இரவுகளின் மீதான் அச்சம் சிறு வயதிலயே தோன்றிவிட்டது. இருளின் இடுக்குகளில் என்ன புதைந்து இருக்கும் என்ற கேள்விகள் சிறு வயதிலயே துவங்கி விட்டன. இரவுகளின் மீதான நம் முதல் ஈர்ப்பு பயத்தின் அடிபடையிலேயே துவங்குகிறது. பகல்களை போன்றதல்ல இரவுகள், நமக்கு பகல் என்பது உணவு, கல்வி, விளையாட்டு, நீயும் நானும் முகம் பார்த்து கொள்ளும் கண்ணாடி, ஆனால் இரவுகள் உணர்வுகளின் அடிப்படையில் உணரப்படுவது, நமக்கும் இயற்கைக்கும் இடைவெளி குறைந்து, அதனுடன் கலக்கும் பொழுதுகள், இந்த புரிதல் இன்மையே நம் சிறுவயது பயத்தின் அடிபடையாக இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.


வயது கூட கூட, பதின் பருவம் எய்தும் போது, நிலவும், நட்சத்திரங்களும், என்றேனும் பிரகாசமாக, அருகில் வந்து ஒளிரும் கிரகங்களும் வாழ்வின் உண்மையான சந்தோசங்களில் ஒன்றாய் மாறிபோனது.


சற்றே மெலிதான பனி காற்று வீசும், நட்சத்திரங்கள் ஜொலிக்கும், வானின் கருமையுடன், சற்றே நீலமும் கலந்த, டிசம்பர் மாத துல்லிய இரவுகளில் ஏதேனும் ஒன்றில் தான் என் முதல் கவிதை எழுதினேன் என்று நியாபகம். எல்லா மாதங்களையும் விட டிசம்பர் இரவுகளில் தான் வெள்ளை கோடுகளை விசிறிவிட்டது போன்ற வெண்மேகங்கள் அதிகம் கிடைக்கும், வானின் நீலமும் அதிகம் தெரிந்து, பகலா இரவா என்ற மயக்கத்தை ஏற்படுத்தும். இந்த இரவுகளில் பேருந்து பயணம் என்றால் இன்னும் சுகம்.


வாழ்வின் நிலையாமயோ, அன்றாட வாழ்வு தரும் அச்சங்களோ என் மீது முழுமையாக கவிழும் போது நான் நாடி செல்வது இரவுகளைத்தான். இரவு தரும் பேரமைதி எல்லையில்லாதது, அது மீண்டும் என்னை கருவறைக்கு கூட்டிசெல்லுகிறது.


இந்த உலகின் முதல் மனிதனின் முதல் இரவு எப்படி இருந்திருக்கும் என்று என்றேனும் யோசித்திருக்கின்றீர்களா?

No comments: