Thursday, September 18, 2008

சென்னை டு கோவை...

தமிழ்நாட்டில் பகல் நேர ட்ரைனில் நகரங்களுக்கு இடையில் பயணம் செய்வது வாழ்வின் மிக சுவராஸ்யமான இன்பங்களில் ஒன்று...

இந்த வாரம் சென்னையில் இருந்து கோவை சென்றேன். இது போன்ற வண்டிகள் எல்லாம் குழந்தைகளை, வயதானவர்களை, மற்றும் நோயாளிகளை கூட்டி செல்வதற்கு என்றே விடப்பட்டவை என்ற மனோபாவம் நம்முள் ஊறிவிட்டது. நாம் என்னதான் ரிசர்வ் செய்து கொண்டு போனாலும், (ஜன்னலோர சீட்!), நமக்கு அதே சீட் தான் கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் போன ஜென்மம் முழுக்க சிவன் கோவிலில் விளக்கிற்கு எண்ணெய் மட்டுமே ஊற்றிகொண்டிருந்திருக்க வேண்டும். இந்த முறை மனம் முழுக்க நடுக்கத்துடன் தான் வண்டியில் நுழைந்தேன், போன ஜென்மத்தில் திரி கூட போடவில்லை போலிருக்கிறது, என் சீட் முழுக்க குழந்தைகள், மொத்தம் மூன்று பேர், ஜன்னலோர சீட்டுக்காக (சத்தியமாய் என்னுடையது) சண்டை போட்டுகொண்டிருந்தார்கள்.

சீட்டின் அருகில் போய் நின்று கொண்டு பரிதாபமாக பார்த்து கொண்டிருந்த போது, எதிர் சீட்டில் இருந்தவர், உங்க நம்பர் என்ன சார் என்றார், அவர் குரலில் தெரிந்த கம்பீரதிற்கான காரணம் சற்று நேரம் கழித்து தெரிந்தது, சொன்னேன், திரும்பி பக்கத்து சீட்டில் அமர்த்திருந்த, சற்று பளிச்சென்று இருந்த பெண்ணிடம் சிரித்தவாறு சாருக்கு ஜன்னலோர சீட், நாம எல்லோரும் நம்ம சீட்டுக்கே போய்டலாம் என்றார், பிறகு என்னிடம் திரும்பி நீங்க உட்கார்ந்துக்கங்க சார் என்று அனுமதி கொடுத்தார். பளிச் பெண் குழந்தைகளிடம், சித்திகிட்ட வாங்க என்ற கூப்பிட அவர் குரலின் கம்பீரதிற்கான காரணம் புரிந்தது. இது கோவை வரும்வரை தொடர்ந்தது, ஒரு வழியாய் என் இருக்கையில் அமர்ந்தேன்.

அருகில் இருந்த சீட்டில் அமர்ந்திருந்தவர்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர், அவர்கள் முதலில் செய்த காரியம் ஒரு தொட்டிலை கட்டியதுதான்.

பிறகு முதலில் காபி, பிறகு டீ, மீண்டும் காபி, மீண்டும் டீ, அலை அலையாய் வரத் தொடங்கின சாப்பாட்டு விஷயங்கள், ட்ரைன் கோவை போய் சேரவே போவதில்லை என்பதை தெரிந்து கொண்டவர்களை போலவே சாப்பிட தொடங்கினார்கள். கோவை போய் சேரும் வரை இது ஓயவே இல்லை.

பிறகு CD முதல் கர்சீப் வரை விற்பனை தொடங்கியது. வெகு வேகமாக பயணம் செய்யும் நகரின் வீதியில் அமர்ந்திருப்பது போன்றதொரு எண்ணம் மனதில் உண்டாவதை தவிர்க்க இயலவில்லை.

மனதை நெருடிய, நெகிழவைத்த ஒரே ஒரு சம்பவம், நம் வீட்டில் செயற்கையாக நிலாவும், நட்சத்திரங்களையும் மேல் கூரையில் ஒளிர செய்யும் வண்ண sticker விற்பனை செய்த விழி இழந்த விற்பனையாளன். தான் பார்த்தே இராத, பார்கவே முடியாத, நீலமோ, கருப்போ, எந்த வண்ணமோ, எல்லாமே வெறும் சொற்கள் மட்டுமே என்று வாழும் அவர், ஒவ்வொரு முறையும் நிலா என்றும், நட்சத்திரம் என்றும் சொல்லும் போதும் அவர் மனதில் என்ன ஓடியிருக்கும் என்பதை யோசித்த போது, அத்தனை கோவில்களையும், மசூதிகளையும், சர்ச்சுகளையும் விற்று வரும் பணத்தில் இவர் போன்ற அனைவரையும் உட்கார வைத்து சோறு போட்டால் எந்த தெய்வமும் கோவித்துக்கொள்ளாது என்றே தோன்றியது.

2 comments:

SS Senthilvel said...

sakthi

nice one. i like it. keep writing...

websight

Kavitha said...

Ungal katturai migavum nandraga erundadu. Enda katturaiyil hasyam neraindu erupadodu vazhkaiyin yadarthamum nirandu erukiradu. Yosithu parthal ennum kooda sila vizhayangalukaga kuzhandaigalodu potti pottu nammum kuzhandai agi pokirom endru. I enjoyed it.