Thursday, September 16, 2021

வெறுப்பின் விழுதுகளில்......


ஏன் எப்போதும் வெறுப்பின் 

விழுதுகளில் ஆடிக்கொண்டிருக்கின்றாய்

என்றொரு வினாவை இன்றெதிர்கொண்டேன்


இதுதான் காரணமென எதைமட்டும்

குறிப்பிட இயலுமென்னால்...


தவறவிட்ட சூரியோதங்களையா


அறியாத வயதில் அறிந்தவன்

இவனென அளிக்கப்பட்ட

உச்சியின் தனிமையா

அது எனக்களித்த என் அகத்தனிமையா

அதன்பொருட்டு நானிழந்த என்னியல்பா


தன் ஆயிரமாயிரம் கரங்களினால்

இருளின் கதவுகளை தட்டிக்கொண்டிருந்த 

ஒரு மழையினூடே பெருநகரமொன்றின்

வீதிகளில் அலைந்ததயா


தூக்கமுமற்ற விழிப்புமற்ற

மருந்துகளின் வாசமிடையே கழித்த

ஆதுரச்சாலை இரவுகளா


எப்பொழுது இளந்தளிர் விரலொன்று

என் உயிர் தொடுமென்பதையா


எதைச்சொல்வது எதை விடுப்பது


உண்மையில் எனக்கு நானே

சுருக்கிட்டுக் கொண்டிருப்பது

என் அன்பின் வேர்களில்தான்

வெறுப்பின் விழுதுகளில் அல்ல


Emily Dickenson சொன்னது போல்... 

If I can stop one heart from breaking, 

I shall not live in vain; 

If I can ease one life the aching, 

Or cool one pain,

 Or help one fainting Robin Unto his nest again, 

I shall not live in vain. 

ஒரே ஒரு இதயம் முறிவதை தடுக்க முடிந்தால், ஒரு வலியை, வேதனையை குறைக்க முடிந்தால், கூட்டில் இருந்து தவறி விழுந்த குருவியை மீண்டும் அதன் கூட்டுக்கு திருப்பி அனுப்ப முடிந்தால் நான் வாழ்ந்தது வீண் அல்ல...