Sunday, March 14, 2010

ஐ.பி.எல்.

உண்மையில் திருவிழாதான். என் அறையின் ஜன்னல் வழியே தெரியும் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து தெறிக்கும் இசையும், விண்ணை பிளக்கும் கூச்சலும் அதைதான் நினைவுபடுத்துகின்றது... இரவு எட்டு மணிக்கு தொடங்கபோகும் போட்டிக்கு இரண்டு மணி முதலே வரத்தொடங்கி விட்டார்கள். ஒரு வாரமாய் இரவு, பகலாக மின்னொளியில் ஸ்டேடியத்தை புதுப்பிக்கும் பணி... அடிப்படையாய் இருப்பது ஒரே விஷயம் ...பணம்...விளையாடும் விருப்பம், அதற்கென்று இருக்கும் தனி சுவை எல்லாமுமே பணத்திற்கு பின்தான் வருகிறது இந்த திருவிழாவை பொறுத்தவரை...லலித் மோடி என்னும் மிகபெரிய வியாபாரியிடம் சிக்கி உள்ளது கிரிக்கெட்.

விளையாட்டு என்பதை முதன்முதலில் மனிதன் உணர்ந்தபோது அதை ஒரு கலையாய்தான் நினைத்திருக்க வேண்டும்...வேறு எந்தவொரு காரணமும் விளையாட்டை மனிதஇனம் பின்தொடர காரணமாக இருந்திருக்க முடியாது. நிச்சயம் பணம் ஒரு காரணமாக இருந்திருக்க முடியாது. எல்லாமும் தலைகீழாக மாறி விட்டது. இதன் மிகபெரிய வெற்றிக்கு மிகமுக்கிய காரணம், இன்றைய இந்திய மக்கள் தொகையில் பாதி அளவு இருக்கும் 30 வயதிற்க்கு குறைவானவர்கள்தான், அதைவிட முக்கியம் அவர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு அதிகமான பணம், என்ன செய்வதென்று தெரியாமல், ஏதாவது செய்ய வேண்டும் என்று இருப்பவர்களுக்கு எல்லாவற்றையும் கவர்ச்சி கலந்து கொடுக்கும் இது மிகவும் ஈர்த்தது வியப்பேதும் இல்லைதான்.

கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை, அதனினும் கொடிது இளமையில் செல்வம். அதுதான் இந்த தேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின் முதல் 20 வருடங்கள் அமெரிக்காவில் ஏற்பட்ட நிலையில் நம் இளைஞர்கள் இன்று இருக்கிறார்கள். இளமை, அதுகொடுக்கும் வேகம், தைர்யம், கிறுக்குத்தனம், இதை எல்லாம் தாங்க பணம்...எனினும் வருடம் முழுதும் பூ பூக்கும், ஏதேனும் ஒரு இடத்தில மழை பெய்து கொண்டே இருக்கும், ஆழமான 2000 வருட பாரம்பரியம் கொண்ட இந்த தேசம் இதையும் தாங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தாங்க வேண்டும்.

ஒரு வாரமாக நான் கவனித்து வரும் விஷயம், இரவு முழுவதும் எரியும் இந்த ராட்சச விளக்குகள் என் அறையின் எதிரில் ஸ்டேடியத்தில் இருக்கும் மரங்களில் வசிக்கும் காகங்களின் தூக்கத்தை மட்டுமல்ல அவைகளின் இரவு பகல் சுழற்சியையும் மாற்றி விட்டது, இரவு முழுக்க அவைகள் பறப்பதும், பிறகு இரவு இன்னமும் உள்ளது என்று உணர்ந்து பதறிபோய் மீண்டும் கூடு திரும்புவதுமாய் உள்ளன, நாரைகள் வேறு விளக்கை சுற்றி சுற்றி பறந்துகொண்டே இருக்கின்றன, இரவு முழுவதும். சூரியன் வரும் போது அவைகள் என்ன செய்தன என்று தெரியவே இல்லை, எப்படி உணவை தேடிக்கொண்டன என்று லலித் மோடிக்கு தெரிந்தால் சொல்லலாம். வலிமையானவை மட்டுமே வாழும் என்ற நிலைபாட்டை இப்பொழுது இந்த கிரகத்தை ஆட்சி செய்யும் மனித விலங்குகள் நாள்தோறும் நிருபித்து கொண்டே இருக்கின்றன, ஏறத்தாழ பாதிக்குமேல் போய் விட்டது, மீதி இருக்கபோவது இந்த விலங்குகள் மட்டும்தான், அழிக்க எதுவும் இல்லாத நிலயில் தன்னுடைய கூட்டத்தையே அழிக்க தொடங்கும், ஏற்கனவே அதை தொடங்கியும் விட்டோம்.

1 comment:

Anonymous said...

Manida enathukul panam paduthum pattai neril parthu erukiran, unarndum erukiran. 5 vayaduku utpatta pillaigal velaiku povadum enda nattilthan, nadamadum devaivangalaga thangalai matrikonda samiyargalin sothu kanakkai kettal, India matra nadugaluku kadan kodukalam. Neengal oru padi melae poi, manida ennam mattum alla, enda boomi pandin matra uyirgaluku panathal erpaduthum matrathai sonnadu arumai.